''ராஜபக்ஷக்களுக்காகவே ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டது : முஸ்லிம்களை பயன்படுத்திய விதம் இதோ.." அம்பலப்படுத்திய அரசாங்கம்



ராஜபக்ஷர்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்ட சூழ்நிலையினால் தான் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றன. இந்த தாக்குதல்களை தடுத்திருந்திருக்கலாம். புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

 பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில்உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர்,
 
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் குற்றத்தின் பொறுப்புதாரிகள் பேசுவதும், அதற்கு சபையில் ஒருதரப்பினர் கரகோசம் எழுப்புவதும் கவலைக்குரியது.
தமது ஆட்சியில் நடத்த தாக்குதலை மறந்து விட்டு இன்று எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தைப் பார்த்து விமர்சிப்பதும் கவலைக்குரியது.
அரசியலுக்காக இவர்கள் இந்தளவுக்கு கீழ் நிலையில் சென்றிருப்பதையிட்டு வெட்கடைய வேண்டும்.

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை ஒரு வரையறைக்குள் கொண்டுவர  முடியாது. 2015 ஆம் ஆண்டு ராஜபக்ஷர்கள் தோல்வியடைந்ததன் பின்னர் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான சூழல் நாட்டில் ஏற்படுத்தப்பட்டது.
மைத்திரி  ரணில் இருவருக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவித்து அரசியல் ரீதியில் நெருக்கடியை ராஜபக்ஷக்கள் ஏற்படுத்தினார்கள். இதனால் நல்லாட்சி அரசாங்கம் பலவீனடமடைந்தது.

2015 ஆம் ஆண்டு மக்களாணை பலமாக இருந்த காரணத்தால் ராஜபக்ஷர்களின் நோக்கம் உடனடியாக நிறைவேறவில்லை.
ராஜபக்ஷக்கள்  2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் புலனனாய்வு பிரிவு ஊடாக சிங்களம், முஸ்லிம் இனவாதம் என்று குறிப்பிட்டுக்கொள்ளும் பிரிவினரை உருவாக்கி அவர்களை தமது தேவைக்காக பயன்படுத்தினார்கள்
 
இந்த குழுக்கள் ஊடாகவே ராஜபக்ஷக்கள் 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் தாங்கள் ஆட்சிக்கு வருவதற்கான சூழலை ஏற்படுத்தினார்கள்.
முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்தார்கள். இதனால் இலங்கையில் வாழ முடியாது என்ற நிலைக்கு முஸ்லிம் சமூகத்தினர் தள்ளப்பட்டார்கள். அதனால் அவர்கள் ஒவ்வொரு பிரிவுக்கு தள்ளப்பட்டார்கள்.

தவறான வழிகளுக்கும் செல்ல நேரிட்டது. இதன் பின்னரே குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

அரசியல் அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றுவதற்காக முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக வன்மங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
ராஜபக்ஷர்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்ட சூழ்நிலையினால் தான் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றன. இந்த தாக்குதல்களை தடுத்திருக்கும். புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

இந்த அடிப்படைவாதம் தொடர்பில் உலமா சபை உட்பட முஸ்லிம் பிரதிநிதிகள் பலமுறை எடுத்துரைத்தும் ரணில், அரசாங்கம் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. ஆனால் மக்களுக்கு வழங்கிய
வாக்குறுதிக்கு அமைய உண்மையை நாங்கள் வெளிக்கொண்டு வருவோம் என்று உறுதியளிக்கின்றேன் என்றார்.